சுகம் கிடைக்க, சிரமம் தீர இதை பாராயணம்செய்யுங்கள்
இந்த துதிப்பாடலை அனுதினமும் காலையிலும் மாலையிலும் பக்தி சிரத்தையுடன் பாடிவந்தால் எண்ணியவை அனைத்தும் ஈடேறும் ,
மேலும் செல்வம் பெருகி,நோயற்ற இனிய வாழ்வு பெறலாம்!!!
அல்லல் தீர்ப்பதற்கே அவதரித்து வந்தவளே
ஆதிசங்கரர் கனவில் வந்து சிலையாக நிற்பவளே
தொல்லை எதுவரினும் தீர்த்துவைக்கும் உமையவளே
துணை நிற்பாய் அம்மா என்றும் போற்றியே காத்திடுவாய்
கொல்லூரில் குடிகொண்ட கோதையே பகவதியே
குறை தீர்ப்பாய் குணகுன்றே குலத்தையும் காத்தருள்வாய்
எல்லோரையும் வாழவைக்கும் எம் தாயே பார்வதியே
என்மீதும் அருள் பொழிவாய் இணையில்லாத் திருவுருவே
அன்னையே உமையவளே அசுரனை அழித்தவளே
அகிலமெல்லாம் வாழ்ந்திடவே அவதாரம் எடுத்தவளே
முன்னம் யாம் செய்தவத்தால் முன்னேற்றம் காண எண்ணி
முன்வந்தோம் உனைப் பணிய முக்காலம் உணர்ந்தவளே
என்னை மட்டுமின்றி இவ்வுலகையும் வாழவைப்பாய்
இருளினைப் போக்கி நீயும் ஒளியினை தந்திடுவாய்
அன்னையே அம்பிகையே அருள் தருவாய் ஆத்தாளே
அவனியெல்லாம் புகழ் மணக்க அமர்ந்தவளே வணங்குகின்றேன்
பாவநாசினிக் கரையினிலே பாங்காக இருப்பவளே
பாரெலாம் உனைப் புகழ அருளினைப் பொழிபவளே
பாவங்களைத் தீர்த்திடவே உன் பாதம் பணிகின்றோம்
பக்தர்களுக்கு அருள் சுரக்கும் பண்பின் உறைவிடமே
தேவருலகம் போற்ற வாழும் திருவுருவே மலைமகளே
திருவோடு வளமெல்லாம் சிறப்பாகத் தந்திடுவாய்
பாவ நாசம் செய்ய வந்த பாங்கான தெய்வத்தாயே
பரிவுடனே வாழவைப்பாய் பணிகின்றேன் உன்னையம்மா
தாயே ஸ்ரீ மூகாம்பிகையே