தெரிந்து கொண்ட சில நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

I am thankful to my friend mr.jayaram
தெரிந்து கொண்ட சில நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் நிர்பந்தப் படுத்தவில்லை. விருப்பமுள்ளவர், இந்த தொடரில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, செயல் படுத்தி வாழ்க்கையை சீர் படுத்திக் கொள்ளலாம்.

இவற்றுக்கான ஆதாரங்களை தேடாதீர்கள். நடை முறைப்படுத்தி நன்மை அடையுங்கள்.

“பூசை முறை” என்று சித்தர்கள் சொல்வது “நம்முள்ளே இறையை கண்டு” மானசீகமாக செய்கிற பூசையைத்தான். வெளியே உருவ வழிபாட்டில் அவர்கள் செய்ததெல்லாம் உலக, மனித நன்மைக்காகத்தான். உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள் என்று ஒரு வழக்குச்சொல் இன்றும் உண்டு. உண்மை. தனிப்பட்ட மனிதனை உபதேசிக்கும் போது, அவன் கர்மா இடம் கொடுத்தால், உருவ வழிபாட்டை எதிர்த்தனர், உள் பூசையை அறிவுறுத்தினர். கலியின் பாதிப்பினால், உள்பூசை என்பது எல்லோராலும் முடியாது, மனித மனம் உலக இன்பங்களை நோக்கி பயணிக்கும். அப்படிப்பட்ட மனிதனை நல் வழிப்படுத்த எண்ணி, பொது நலத்திற்காக தங்கள் ஆத்ம சக்தியை பகிர்ந்து புற வழிபாட்டிற்காக லிங்கமாக அமர்ந்தனர், கோவில்களை அமைத்தனர். அப்பொழுதும் அவர்கள் எண்ணம் “மனித மேம்பாட்டில்” தான் இருந்தது.

உருவ வழிபாட்டை செய்கிறவன் என்றேனும் ஒருநாள் உணர்ந்து, உள் நோக்கி திரும்பட்டும் என்கிற எண்ணத்தில் தான் வெளி பூசை என்கிற உருவ வழிபாட்டையும் நிறுவினர். அனைத்தையும் துறந்தவர்கள், எது வந்ததோ அதையும் ஏற்றுக்கொள்கிற மனபக்குவத்தையும் கொண்டிருந்தனர். அதனால் எதையும் இகழவில்லை.
***
அருள் நிறைந்த வாழ்க்கைக்கு – 2
சித்தர்கள் நிலை என்பது வேறு.
அவர்கள் தவமிருந்து தன்னை உணர்ந்து, தன் நிலையை இறையிடம் உணர்த்தி மேல் நிலை அடைந்தவர்கள்.
அப்படிப்பட்ட நிலையை அடைந்த சித்தர்கள் கூட ஒரு எளிய மனிதனாகத்தான் ஏதோ ஒரு ஜென்மத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட நம்பிக்கையும், அசைவில்லாத திட வைராக்கியமும் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றது என்பதே உண்மை.

அதுவே அவர்களை அனைத்தையும் துறக்க வைத்தது. நாம் நமது என்கிற நிலையை களைந்து “லோக க்ஷேமம்” என்கிற நிலைக்கு கொண்டு சென்றது.

இந்தக் காலத்தில் அத்தனை கடினமான துறவு நிலை, குடும்பத்தில் பிறந்து நிறைய கடமைகளை சுமந்து நடக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு, சாத்தியமில்லை. ஆகவே எத்தனை முடியுமோ அந்த அளவுக்கு “உன்னை சுத்தப் படுத்திக்கொள்” என்பதற்கு ஒரு சில விஷயங்களை சொல்லிப் போயினர். அவற்றில் ஒரு சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

நடப்பதெல்லாம் ஈசன் செயல் என்றறி
இரப்பார் முன், கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லாதே.
இந்த நிமிடம், எதுவாகினும் நம்மிடம் இருக்க, வேண்டுபவனிடம், பின்னொருமுறை தருகிறேன் என்று சொல்லாதே.

எதுவும் எனது என எண்ணாதே. அனைத்தும் அதை படைத்த இறைவனுக்கே சொந்தம்.
புகழும் போது “புளங்கிதம்” கொள்வதும், துக்கத்தில் துயரடைவதும் கூடாது. (ஏக மன பக்குவ நிலை கொள்ளவேண்டும்).
வாசி நிலை பழகவேண்டும்.

பார்வையாளனாக இரு, எதையும் உருவாக்காதே.
செயல் அனைத்தும் அறம் வளர்ப்பதாக வேண்டும்.
பதற்றம் களைய பயம் விலகும்.

ஆசை அறுத்தால் வாசனை விலகும். வாசனை இல்லேல் பிறவி தளை இல்லை.
இயற்கையோடு ஒன்றி நில்.

ஆக்கும், அழிக்கும் உரிமை இறைக்கு மட்டும்.
மேல் சொன்னவை ஒரு துளி தான். இன்னும் நிறைய உண்டு. சரி! இனி வாழும் முறையில் பெரியவர்கள் சொல்லிப்போன சில விஷயங்களை பார்ப்போம்.

நம் வாழ்வில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளை தரப்படுத்தி விவரித்துள்ளார்கள். சில இடங்களில் இப்படி செய் என்கிற உத்தரவு மட்டும் தான் இருக்கும். ஏன் என்று கேள்வி கேட்க நமது மனம் விரும்பும். ஆனால் அதற்கு விடை இல்லை. ஆதலால், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். தரப்படுத்தப்பட்ட தலைப்புக்கள் பூசை முறை, குளிக்கும் முறை, உறங்கும் முறை, தர்மம் செய்யும் முறை, வாழும் முறை என பலவிதமாக உள்ளது.

முதலில், குளிக்கும் முறையை பார்ப்போம்.

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் “ஓம்” என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.

குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது. தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.

ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.

நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு – 3
அசுத்தமான நீரை ஒரு போதும் நாம் வசிக்கும் இடத்தில் சேர்த்து வைக்கக்கூடாது. உடனேயே நம் இடத்தை விட்டு வெளியேற்றி விடவேண்டும்.
சுத்த நீரில் அழுக்கு நீரை ஒரு போதும் கலக்க கூடாது. அது மிகுந்த தோஷத்தை கொண்டு தரும்.
விளையாட்டுக்கேனும் நீரை காலால் உதைத்து விளையாடக்கூடாது.

குளிக்கும் போது குவளையில் நீரெடுத்து குளித்தால், நிதானமாக எடுத்து ஊற்றிக்கொள்ளவேண்டும். நம்மில் பலருக்கும் வேக வேகமாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் குளிப்பது தான் பிடிக்கும். அது தவறு. அப்படி குளிப்பது தண்ணீரை பழிப்பதற்கு சமம்.
குளிக்கும் போது, குளித்த கழிவு நீரில் ஒரு போதும் துப்பாதீர்கள்.

வாரத்தில் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால், உடலில் சேரும் அதிகமான சூட்டை விலக்க முடியும். ஆண்கள் புதன், சனி தினங்களிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் எண்ணை தேய்த்து குளிக்கவேண்டும்.

குளிக்கும் போது தலையிலிருந்து வழிகிற நீர் முன் நெற்றி வழியாக அல்லது முன்பக்கமாக வழிந்து ஓடுகிறபடி குளிக்கவேண்டும். தலையின் பின் பக்கமாக வழிகிற நீர் “நரக தீர்த்தம்” எனப்படும். அதை ஒரு போதும் அப்படி வழிய விடக்கூடாது.

ஓடும் நீர் சுத்தமான தீர்த்தமாக கருதப்படுகிறது.
குளம் ஆறு, நதி, கடல் போன்ற பொது இடங்களில் குளிக்கும் போது, நாம் குளிக்கும் நீர் பிறர் மீது தெறிக்காமல்/படாமல் இருக்க பார்த்துக் குளிக்கவேண்டும். அது போலவே, பிறர் குளிக்கும் நீர் திவலைகள், நம் மீது படாமல் விலகி நின்று குளிக்கவேண்டும்.

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு – 4

குளிக்கும் முறையில் பெரியவர்கள் சொல்லிப்போனதை நினைவில் நின்றவரை தெரியப்படுத்திவிட்டேன். விட்டுப் போனது ஏதேனும் நினைவுக்கு வந்தால், பின்னர் தெரிவிக்கிறேன். இனி பூசை முறையை பார்ப்போம்.

குளித்து முடித்தவுடன் கிழக்கு பார்த்து நின்று சூரியனை த்யானித்து நமஸ்காரம் செய்யவேண்டும். இந்த உலகத்தில் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் அருளுவது சூரிய தேவனே.

பூசைக்கான பூக்களை சூரிய உதயத்துக்கு பின்னும், அஸ்தமனத்துக்கு முன்னும் தான் பறிக்கலாம். அப்படி பறித்த பூக்களை சுத்தமான நீர் கொண்டு கழுவிய பின் தான் பூசைக்கு உபயோகிக்கலாம்.

பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் – ஞாயிறு, வியாழன், சனி
வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.

உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது. அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல். கணவன் மனைவி பிரிய வேண்டி வரும்.
சாலிகிராமத்தில் பல வகைகள் உண்டு. இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாலிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது.

அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும். ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்மரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்மர் சாலிக்ராமமாக மாறியது

. அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டிச்சுவராக்கி விடும். கெட்ட ஆவிகள் கொடிகட்டி பறக்க ஆரம்பிக்கும்.

சிவலிங்கம், சாலிக்ராமம் போன்றவற்றுக்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். தினமும் செய்ய முடியாத நிலையில் சிவலிங்கத்தை விபூதியால் மூடிவைத்தும், சாலிக்ராமத்தை அக்ஷதையால் மூடிவைத்தும் வீட்டில் வைக்க வேண்டும்.

ஆயுத வடிவங்களான, வேல், சூலம், வாள், கத்தி போன்றவற்றை தனியாக வைத்து வீட்டில் பூசை செய்யக்கூடாது. இறை உருவ வழிபாட்டுடன் மட்டும்தான் இவை இருக்கலாம். இல்லையென்றால், வீட்டில் உள்ள அனைவரிடமும் உக்கிர தன்மையை உருவாக்கும்.

நிவேதனம் என்பது பூசையின் ஒரு அங்கம். நிவேதனம் இல்லாமல் ஒரு பூசை நிறைவு பெறுவதில்லை. நிவேதனம் என்றால் “தெரிவிப்பது” என்று அர்த்தம். அதாவது எதுவுமே என்னுடையது இல்லை என்று உணர்ந்து தெரிவிக்கிற முறை தான் “நிவேதனம்”.
வெளிச்சம் என்பது சாதகமான ஒரு நிலை. ஆதலால் விளக்கு வெளிச்சம் என்பது வீட்டுக்கு நல்லதையே செய்யும்.

24 மணி நேரமும் எரிகிற அளவுக்கு ஒரு விளக்கை ஏற்றி வந்தால், அந்த வீட்டில் கெடுதல்கள் அண்டாது.
பூசை அறையில் படங்கள், விக்ரகங்கள் கிழக்கு அல்லது வடக்கிலிருந்து நம்மை நோக்கி இருப்பது மிகச் சிறந்த அருளை பெற்று தரும்.

விளக்கில் தீபம் கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ இருக்கவேண்டும்.

பூசை, ஜபம், த்யானம் போன்றவைக்கு அமரும் போது கிழக்கு, வடக்கு நோக்கி அமர்வது உத்தமம். சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் போன்றவர்களை நினைத்து த்யானத்தில் அமரும் போது வடக்கு மிக சிறப்பானது.
தினமும் குறைந்தது ஒரு நாழிகையேனும் பூசை த்யானத்துக்கு ஒதுக்க வேண்டும். மனித வாழ்வை தந்த இறையின் நோக்கமே, நம்முள் உறையும் இறை சக்தியை நாம் உணரவேண்டும் என்பதே. அதற்காக நாம் ஒரு அடி எடுத்துவைத்தால், இறைவன் நமக்காக 10 அடி எடுத்து முன் வருவான்.

மந்திரங்கள், மூல மந்திரங்கள், ஜபங்கள் போன்றவை அதிர்வினால், நம்முள் உறையும் ஆதார சக்ரங்களை தூண்டிவிடுகிறது. பல வித புரிதல்களுக்கும் அதுவே நல்ல தொடக்கமாக அமையும்.

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு – 5

நம்மில் பலருக்கும் த்யானத்தில் அமர்ந்தால் அது எளிதில் கைவல்யமாவதில்லை. மனம் எங்கெங்கோ ஓடும், நிலைத்து நிற்காது. கவனத்தை ஒரு முனையில் பிடித்து நிறுத்த ஒரு எளிய வழி இருக்கிறது. முதலில் இந்த உலகத்தில் எதுவும் எனக்கு தேவை/முக்கியம் இல்லை என்று திடமாக நினைத்துக்கொண்டு, கவனத்தால் சுழி முனையில் (புருவங்களுக்கிடையில்) “ஓம்” என்று எழுதுங்கள். இதை தொடர்ந்து செய்யுங்கள். த்யானம் நீங்கள் நினைக்கும் விதத்தில் அமையும். கவனம் “ஓம்” இல் மட்டும் இருக்கட்டும்.

ஊன் உடம்பு ஆலயம் என்றார்கள் பெரியவர்கள். அப்படியானால் நமது சித்தம் அல்லது மார்பு இறை அமர வேண்டிய இடம். எந்த ரூபத்தில் இறையை வணங்க விரும்புகிறீர்களோ அந்த ரூபத்தில் அங்கு இருத்தி மானசீக பூசையை பண்ணலாம். உதாரணமாக “முருகரை” நீங்கள் விரும்பினால் அவர் வேலுடன் நிற்கும் கோலத்தில் மனதில் த்யானித்து இருத்தி அவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஜபங்கள், நிவேதனம் போன்றவை செய்யலாம். அவர் நம் உள்ளே இருப்பதை கண்டு அப்படியே த்யானத்தில் இருக்கலாம். மனம் ஒன்று பட்டுவிடும். இப்படி தினமும் செய்து வர ஒரு சில நாட்களில் நம் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதை நீங்கள் உணரமுடியும்.நம் செயல்கள் அனைத்தும் இறை செயல் போல அன்பு நிறைந்ததாக இருக்கும்.

அனைத்து வித்தியாசங்களும் விலகி விடும். இதை தான் பெரியவர்கள் திரை விலகல் என்கிறார்கள். லிங்கம் வைத்து வணங்கி வந்தால் ஒரு சில நாட்களிலேயே நம் மார்பில், நெஞ்சு கூட்டுக்குள் லிங்க ரூபம் உந்தி நிற்பதை நம்மால் உணர முடியும்.
ஜபம் பண்ணும் பொது சாத்வீக மந்திரங்கள் தான் நல்லது. ஏன் என்றால், என்ன ஜபம் ஓடுகிறதோ அதற்கேற்றாற்போல் நம் உடலும் மனமும் மாறிவிடும்.
குறைந்தது அமைதியான வாழ்க்கை வேண்டும் என்றால், எந்தக் காரணம் கொண்டும் “அதர்வண வேதம்” பக்கம் சென்று விடாதீர்கள். அது கலியுகத்தில் மனிதர் விலக்கவேண்டியது என்கிறார்கள் பெரியவர்கள்.
இத்தனை விஷயங்களை படிக்கும் பொது உங்களுக்கு ஒரு சித்தர் பாடல் நினைவுக்கு வரலாம். “மனம் செம்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டா”,

இதெல்லாம் எதற்கு என்று? பாரபட்சமின்றி உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள். உங்கள் மனம் சித்தர்கள் சொல்கிற அளவுக்கு “செம்மையாகிவிட்டதா?” என்று. இல்லையெனில் மேல் சொன்னவை அத்தனையும் தேவை தான், அந்த “செம்மையான மனநிலை” அடையும் வரை. அதற்கு பின் மந்திரம் தேவை இல்லை.

பேசக் கூடாத மூன்று நேரங்களில், இரண்டாவது நேரம் “பூசை, த்யானம்” போன்றவை செய்யும் நேரம்.
பூசை, த்யானம் போன்றவைக்கு நாம் அமரும் நேரம் உடுத்தியிருக்கும் உடை சுத்தமாக அழுக்குகள் இன்றி இருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர் பெருமான். ஆதலால், அதற்காகவே ஒரு உடையை தனியாக மாற்றி வைக்கலாம்.

நம் நெற்றியை “சிவன் விளையாடும் தெரு” என்கிறார் ஒரு சித்தர். இன்னொருவரோ “உள்ளே இறை உறைகிறது என்று உணர்ந்தேன், ஆதலால் திருநீர் பூசி குங்குமம் இடுகிறேன்” என்கிறார். உணர்ந்தவர்கள் சொன்னதை நம்புவோம். ஒரு போதும் நெற்றியில் விபூதி குங்குமம் இல்லாமல் இருக்ககூடாது. பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
நீரில் குழைத்து நெற்றிக்கு இட்டுக்கொள்வது சித்தர், முனிவர் முறை.

பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் அடங்கிய இடம் கோவில். அதனால் தான் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். 14 நான்கும் அடங்கிய இடம் சென்றால் நம்முள்ளும் அவர்களின் ஆதிக்கம் அடங்கிவிடும். வாரத்தில் ஒருமுறையேனும் ஒரு கோவில் சென்று நம்மை சுத்தப்படுத்திக் கொள்வோம்.

எந்தக் கோவிலுக்கு சென்றாலும், நவ கிரக சன்னதிக்கு செல்லாதீர்கள்.ஒரு ஆடு தானே போய் கசாப்புகடைகாரனிடம் தலையை கொடுப்பது போன்றது. நவக்ரகங்கள் நம்மை ஆட்டி படைக்க இறைவனால் நியமிக்க பட்டவை. இதில் சந்தேகம் இல்லையே. இறைவனே பூமிக்கு வந்தால் கூட, இவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்! அது தான் தர்மம். அதை விலக்க இறைவனுக்கு கூட அதிகாரம் கிடையாது. உதாரணமாக, சிவனை பிடித்து சனி “ஈஸ்வர” பட்டம் பெற்றான். ஒரு பெரியவரிடம் பேசியபோது சில உண்மைகள் எனக்கு புரிந்தது.

உண்மைகளை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், உண்மை மாறிவிட போவதில்லை. நாம் தான் இழப்புக்கு ஆளாவோம்.அவரின் ஓர் உண்மை விளக்கம் கீழே தருகிறேன். புரிந்து கொள்ளுங்கள். “நவக்ரகங்கள் நம்மை நம் கர்மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த நியமிக்க பட்டவை. அவர்கள் தான் நம்மை சுற்றவேண்டும். நாம் அவர்களை சுற்றகூடாது. மேலும்,ஒன்பதுக்கும், தன்னை தேடி வந்து பூசை பண்ணுவபர்களுக்கு, சலுகை அளிக்க உரிமை கிடையாது.

ஏதேனும் சலுகை அளித்தால், அவர்கள் தலை மீது தொங்கும் கத்தியானது தன் வேலையை பார்க்கும். இப்படி பட்ட சூழ்நிலையில், இவர்கள் பாதிப்பை குறைக்க தான் பிற தேவதைகளை, ப்ரத்யாதி தேவதை என்று பெயரிட்டு இறைவன் நியமித்துள்ளார்.

மனம் திருந்தி, பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்ள இவர்களை தான் நாம் அணுகவேண்டும். ” நம் கர்ம வினைப்படி எழுதி வாங்கி வந்ததை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். முழுமையாக எடுத்து மாற்றி விட முடியாது. வேண்டுமானால் பிரார்த்தனை வழி அதன் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம். ஆதலால் வீட்டில் நவக்ரகங்கள் படத்தை வைத்து வழிபடுவதை தவிர்க்கவும்.

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு – 6

ஆன்மீகத்துக்கு பல முகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று கோவில் வழிபாடு. இருக்கும் இடத்தில் இருந்து பூசை செய்ய முடியாதவர்களுக்கு கோவில் ஒரு வரப்பிரசாதம். அங்கு சென்றால் நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே.
கண்டிப்பாக தலைக்கு குளித்துவிட்டு, அசுத்தமின்றி, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தானம் தரித்ததுதான் கோவில்களுக்கு செல்லவேண்டும்.
கோவில் பூசைக்கு அல்லது இறைவனுக்கு என்று கொடுக்கப்பட்ட எதையும், தொடுவதோ, நமெக்கென எடுத்துக் கொள்வதோ கூடாது

சிவ அபசாரம் என்பது மிகக் கொடிய பாவங்களில் ஒன்று. மெதுவாக ஆனால் வீரியத்துடன் நம்முள் நின்று வருத்தும்.

கோவிலின் ஈசான்ய மூலை மிக புனிதமானது. சற்று நேரம் அங்கமர்ந்து த்யானம் செய்யவும்.
கோவிலில் இகபர வாழ்க்கையின் எண்ணங்களை களைந்து இறைவன் திருவடியை சிந்தையில் நிறுத்துங்கள்.

தரிசனம் முடித்து திரும்புகையில் கோவில் வாசலில் ஒரு நிமிடம் அமர்ந்து கண்மூடி “போதும்! நிறைவாக உள்ளது! இனி வரும் பக்தர்களை வழிநடத்தி அருள் புரியுங்கள்” என்று நினைத்து வரவும்.

கோவில்களில் காணப்படும் கொடி மரத்தை தொட்டு வணங்கக் கூடாது. கொடிமரத்துக்கு பின்னால் மட்டும் தான் கீழே விழுந்து வணங்கலாம். கொடிமரத்தை தாண்டிவிட்டால் கை கூப்பி மட்டும் தான் வணங்க வேண்டும். கோவில் பூசாரிக்கு மட்டும் தான் தன கடமையின் பாகமாக கொடி மரத்தை தாண்டி வணங்குகிற உரிமை உண்டு.

கோவிலில் ஏதேனும் பெரியவர்களை சந்திக்க நேர்ந்தால், கீழே விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. கோவிலில் உறையும் இறையை தவிர வேறு எந்த மனிதருக்கும் நமஸ்கார வணக்கத்தை ஏற்றுக் கொள்கிற தகுதி கிடையாது.

நல்ல எண்ணங்கள் மனதில் இருக்க இறை வழிபாடு நடத்தப் படவேண்டும்.
அமைதி உள்ளும் வெளியேயும் இருக்க நம்மால் இயன்ற மௌனத்தை கடை பிடிக்க வேண்டும்.
நாம ஜபம், மந்திரங்கள் (மனதுள்) நம்முள் படர, இறை அருள் நம்மை சூழ்வதை உணரலாம்.

மருத்துவர்கள் பிரம்மஹத்தி தோஷம் விலக விளகேற்றும் போது, அந்த விளக்கை சிவலிங்கத்துக்கு முன் வைக்கச் சொல்லி பூசாரியிடம் கொடுக்கவும். சிவலிங்கத்துக்கு முன் ஏற்றுகிற விளக்கு மட்டும் தான் “மோக்ஷ தீபமாக” கருதப்படும், பலன் கொடுக்கும்.
கோவிலில் சன்னதியில் இறையை தரிசனம் செய்யும் போது முதலில் பாதத்தை தரிசனம் செய்து மனதில் இருத்தியபின், முகத்தை தரிசனம் செய்யவேண்டும்.

பூ, சந்தானம், விபூதி போன்ற பிரசாதங்களை இரு கை நீட்டி வாங்கிக்கொள்ளவேண்டும். அவை நம் கை விட்டு கீழே சிந்தாமல், சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
கோவில் கோமுகம் மிக புனிதமானது. அங்கு வழியும் தீர்த்தம் நம்முள் இருக்கும் அனைத்து கெடுதல்களையும் விலக்கும்.

கோமுகததை சுத்தம் செய்து, சந்தானம் குங்குமம் இட்டாலே அங்கு உறையும் இறைக்கு நாமே நேரடியாக பூசை செய்த பலன் கிடைக்கும். கோமுகத்தின் அருகில் அனைத்து பெரியவர்களும் உறைவதாக ஐதீகம்.

சிவன் கோவிலில் பிரகாரத்தில் இருக்கும் “பிட்சாடன” மூர்த்தியின் பிச்சை பாத்திரத்தில் நம்மால் இயன்ற காசை போட்டு வேண்டிக்கொண்டால் நம் நிதிநிலை பிரச்சினை உடனே தெளிவாகும்.

Leave a comment