நீங்கள் பரிகாரம் செய்தும் காரியம் நடக்கவில்லையா ?

நீங்கள் பரிகாரம் செய்தும் காரியம் நடக்கவில்லையா அன்பர்களே.அப்போது நீங்கள் இதை பாருங்கள். அப்பைய தீட்சிதர் என்று ஒரு மகன் இருந்தார்.

தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர்.

பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவியிருக்கிறது.

இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.

தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம்.

அந்தப் புல் அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் புல்லிடமிருந்து அந்த வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வாராம்.

ஒரு பண்டிதருடன் இவ்வாறு ஒருமுறை வாதத்தில் ஈடுபட நேர்ந்தபோது, வழக்கம் போல, தமது வலியை தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார். புல்லும் அதுபாட்டுக்கு துள்ள ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். புல் துள்ளுவது அதிகரித்து சற்று உயரமாகவே துள்ள ஆரம்பித்தது.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பண்டிதர் தீட்சிதரிடம், “இவ்வளவு தவ வலிமை கொண்ட நீங்கள் ஏன் நிரந்தரமாக அந்த வலியை போக்கிகொள்ளக்கூடாது? எதற்கு புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க எண்ணக் கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூளை நோய். இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்க நேரிடும்.

அதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றாராம்.
இதிலிருந்து மிகப் பெரிய தவசீலர்களே கூட கர்மாவிலிருந்து தப்பிக்க நினைக்காமல் அதை அனுபவித்து தீர்க்கவே முனைந்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா அன்பர்களே