அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மதுரை தல வரலாறு: தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “”என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி “”வேண்டும்”என்றார்.உடனே முருகன்,””பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,””சுட்ட பழத்தையே கொடேன்”என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,””பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்”என்று கூறி சிரித்தான். சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, “உயிர்களின் மீது “உலகப்பற்று’ என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்’ என்பதே அது.