மோட்சம் அடைய சொல்லவேண்டிய மந்திரம்

அன்பர்களே, நான் ஏற்கனவே மரணத்துக்கு பிறகு என்கிற தலைப்பில் பத்து பகுதி எழுதி இருந்தேன்.

அதில் ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிர் பிரியும்போது, அந்த மனிதன் எதை பார்கிறானோ, அதுவாகவே அவன் பிறவி எடுக்கிறான் என்று சொன்னேன். அந்த நேரத்தில் அவன் கடவுளின் தரிசனத்தை பெற்றுவிட்டால்தான் மோட்சம் என்று சொன்னேன்.

அந்த நேரத்தில் நாம் நினைத்தால் அவன் வருவான். ஆனால் நம்மால் முடியாது. அதனால்தான், ஆழ்வார்கள், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன். அரங்கமாநகருளானே என்றார்கள்.

ஆகையால் அன்பர்களே, அருணகிரிநாதர், திருச்செந்தூர் முருகனை பார்த்து நமக்காகவே பாடி இருக்கிறார். நீங்களும் இதை தினமும் சொல்லி வந்தால், உங்கள் வயதான காலத்திலேயே, உற்ற துணைவன். முருகனே ஆவான் . இப்போதே சொல்லிவிடுங்கள். அப்போது, நமக்கு ஞாபகம் வராது.

வள்ளி தெய்வானையுடன் முருகன் மயிலில் வந்து காட்சி கொடுத்து மோட்சம் அளிப்பதாக இந்த பாட்டின் அர்த்தம் ஆகும். இதோ இந்த பாட்டு உங்களுக்காக.

தொந்தி சரிய மயிரே வெளிரநிரை
தந்த மசைய முதுகே வளைய இதழ்
தொங்க வோருகை தடிமேல் வரமகளிர் – நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரென இருமல்
கிண்கி ணனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு – செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக -துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுக உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை -வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக -அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல -வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -பெருமாளே .

அன்பர்களே திருப்புகழை தமிழில் டைப் செய்வது மிகவும் சிரமம் .இருந்தாலும் பொறுமையாக உங்களுக்காக, குறிப்பாக, வயதானவருக்காக, இதை செய்து இருக்கிறேன். பயன் பெறுங்கள்.

பாட்டுக்கள் அனைத்தும் பெருமாளே பெருமாளே என்றுதான் முடிகிறது . இந்த இடத்தில் சைவ வைணவ ஒற்றுமையை அருணகிநாத குரு அவர்கள் கடைப்பிடித்து இருப்பதை கவனிக்கவேண்டியது ஒன்று

திருப்புகழிலே , ராமாயணம், மகாபாரதம்,பகவத்கீதை ,போன்ற விஷயங்களை எல்லாம் தமிழில் அழகாசொல்லி, அப்பேற்பட்ட பெருமாளின் மருகோனே என்று ஆரவாரப்படுத்துகிறார் அருணகிரியார்.

Leave a comment