வேத ரகசியம்

உண்மையில்ருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிருந்து விலகாதீர்கள்.

தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்கூடாது.

நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான, கோணல் புத்தி
இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்த சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும் போதும், அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும்