ஷீரடி சாய்பாபாவின் அஷ்டக வேண்டுதல்கள்

அஷ்டகம் என்றால் எட்டு மந்திரங்கள் என அர்த்தம்.அனைத்து தெய்வத்துக்கும் இதுபோல் இருக்கிறது. இப்போது சீரடி சாய்பாபாவின் அஷ்டகத்தை தனித்தனியாக பாப்போம் அன்பர்களே.

1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழுதும் அடியேனின் ஐயன் சாயினாதரே. அத்ரி அனசூயா ஈன்ற மும்மூர்த்தி சேர்த்த அவதாரமே. வாசுகியால் கடையப்பெற்று அமுதம் பொங்கிய தலம் ஷீரடியில் எழுந்தருளியுள்ள பரப்பிரம்மமே .கற்பகத்தருவே. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே,ஸ்ரீ பாத வல்லபனே .நரசிம்ம சரஸ்வதியே.அக்கல்கொட் சாமி சமர்த்தனே. பக்தனின் இன்னல் போக்கும் அனாத ரக்ஷகனே, அல்லாவின் புதல்வனே, இடர் நீக்கி,துயர் துடைத்து நலம் நல்க விரைந்து வந்து அருள் புரிவாய் புண்ணிய நகர் ஷீரடிவாசா சாயினாதனே.

 

2. அனுதினமும் சாயிநாமமே பிரதானம் என்று எனக்கு விதித்த கடமையையும் மறந்து ,உன்னையே நினைத்து, உன் பாதமே பணிந்து ,பலவித பூஜைகள் செய்தேன். உன் திருக்கதை படித்தேன்.திருநாமம் ஜபித்தேன். உன் சொல்படி அன்னதானம் செய்தேன். பிறர் மனதை நோகடிக்கவில்லை. இத்தனை செய்தும் இக்கணம் இன்னல் வந்திட ,நான் செய்த பிழைதான் யாதென உரைத்திடுவாய்.பக்தி வேடம் பூண்டு போலி நாடகம் புரியும் அற்பன் என்று என்னைப் புரிந்திட்டாயா.குழம்பித்தவிக்கும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ணிய நகர் ஷீரடி வாசா சாயினாதனே.

 

3. வசீகர அருளால் பக்தரை உன் பக்கம் காணச் செய்தாயே. கோடானு கோடி பக்தர் உன் பாதம் பற்றியதால்,அடியேனுக்கு இறங்கிட உமக்கு நேரமில்லையா.மனமில்லையா.நொடிப்பொழுதும் உன்னை பிரியேன்.இமைப்பொழுதும் உன்னை விலகிடேன்.என் பக்தியில் நீ கண்ட,பிழை யறியேன் சாமி.முன்வினையோ,தீவினையோ,நானறியேன்.தீவினையை தீக்கிரை யாக்க உன் தயவொன்று போதுமே.கருணா சாகரா. தாயிலும் மேலான,தயை தனம் மனம் கொண்டவனே. சேய் அழுதால் தாங்குமோ உன் மனமே. உன் நாமமே பிதற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ணிய நகர் ஷீரடி வாச சாயினாதனே.

 

4. கொடும் விட நஞ்சு கொண்ட அரவம் தீண்டியும்,ஷாமாவை காலனின் பிடியில் இருந்து காத்தாயே.சர்வேசா.சேஷசாயி. என்னை காத்தருள ஏன் இந்த தயக்கம். கண்கள் நீர் சொரிந்து காய்ந்தும் போனோமே. நாவும் சாயிநாமம் பாடியே உலர்ந்தும் போனதே. என் மேல் நீ கொண்ட கோபம் அறியேனே.உன் நினைவன்றி வேறு எதையும் நினைந்திடேனே.நீயே அடைக்கலம் என்று தஞ்சமும் அடைந்தேனே. என் பக்திக்கு இறங்க இக்கணமே என் கண் முன்னே தோன்றி வேண்டிய வரமளித்திட விரைந்து வந்து அருள்வாய் புன்னியநகர் ஷீரடி வாசா சாயினாதனே.

 

5. தூய மனதில் நான் உன்மேல் கொண்ட பக்தி சத்தியமே.உன் திருக்கதை கேட்டு சாயி பக்தனாகி,சாயி பித்தனும் ஆனேனே. உன் பதமலரில் பக்தியோடு விழுந்து கிடந்தேனே.நீ என்னைப் பாராமல்,போனால்,அது நியாயமில்லையே. என் துயர் நீ போக்காவிடில் உலகம் உன்னை கேலி பேசுமே, சாயி உன்னிடம் இறங்கவில்லை.உன் பக்தி ஒரு நாடகமே என்று என்னை தூற்றுமே. சாயி பக்தனுக்கா துயரம்.உலகம் உன்னையும் பழிக்குமே.உன்னை பழித்தால் என் மனம் தாங்காதே.பழிச் சொல்லில் இருந்து காப்பாத்தி பக்தனை அருள விரைந்து வந்து அருள்வாய் புண்ணிய நகர் ஷீரடி வாசா சாயினாதனே.

 

6. ஏதும் அறியா மூடனாய் ,அறிவிலியாய் ,இறைவனை அறியாமல்,திரிந்த என்னை உன் பாதம் காணச் செய்து பக்தனாக்கினாய் .எம்மதமும் சம்மதம் என்ற சர்வ தத்துவ போதகனே. இக்கணம் எனக்கு வந்து துயர் நீ போக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த கூத்தாடுமே. தெய்வம் பொய்யானதே என்று எண்ணி எள்ளி நகையாடுமே. நீ பொய் இல்லை.சத்தியம் என்று நான் அறிவேன். உண்மையாய் உலகு முழுவதும் வியாபிக்கின்றாய் என்று பறை சாற்றும் எனக்குவிரைந்து வந்து அருள்வாய் புண்ணிய நகர் ஷீரடி வாசா சாயினாதனே.

 

7. அக்னி ஹோத்ரியாய் துணியை எரியவிட்டு அரும் உதியால் பக்தனின் பிணி துயர் போக்கும் துவாரகா மாயி வாழ் ஆனந்த சாயி.பஞ்சபூதமும் உந்தன் கை அசைவிலே,விரல் சொடுக்கில் விதியையே மாத்தும் விஸ்வநாதனே.பிரம்ம ஸ்வரூபனே.உன்னை யன்றி யாரையும் அறியாத என் வேதனையை போக்கிடுவாய். துன்பக்கடலில், தத்தளிக்கும் எமக்கு தோணியாய் வந்திடுவாய்.என் விண்ணப்பங்களை விருப்பமாய் கேட்டு என் இன்னல் களைந்து இன்பம் தந்திடுவாய். ஈடில்லா செல்வமும் வெற்றியும் பிணி இல்லா வாழ்வும், இறையருளும்,நல்ல கதியும்,பெற்றிட விரைந்து வந்து அருள்வாய் புண்ணிய நகர் ஷீரடி வாசா சாயினாதனே.

 

8. யாமிருக்க பயம் ஏன். நம்பிக்கை, பொறுமை மிக்க பக்தி கொள் என்றாய். எத்தனை காலம் பொறுமை காப்பேன். அதற்க்கும் ஒரு எல்லை உண்டே, நான் கடவுள் இல்லையே. ஜனன மரணம் எய்தும் அற்ப மானிடப் பிறவியே. காலம் கடந்து விட்டதே. என்னையும் தாண்டி பலர் முன் சென்று விட்டனரே.கவலையில் நெஞ்சம் கனக்கிறதே. தோல்வியில் துவண்டு வேதனையில் மாண்டு தூண்டிலிட்ட புழுபோல் துடிதுடிக்கும் பக்தனுக்கு இறங்கி வேண்டிய பதினாறு செல்வமிக்க வளமான வாழ்வும், சீரும் சிறப்பும்,ஆரோக்கியம் ஆயுளும்,புகழ் தரும் வெற்றியும் ,தனதானம் அனைத்தும் இனிதே தந்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ணிய நகர் ஷீரடி வாசா சாயினாதனே.

***

அன்பர்களே, இந்த எட்டையும் தினமும் காலை மாலைஇரு வேளையும் சொல்லி வாருங்கள்.எல்லாம் நலமாகும்.

இந்த தகவலை பகிரவும்

One thought on “ஷீரடி சாய்பாபாவின் அஷ்டக வேண்டுதல்கள்

  1. அல்லாவின் புதல்வனே means he had Muslim Background or not?Could you explain.

Leave a comment